Wednesday, December 14, 2011

அப்பாவோட தெவசம்

இன்னக்கி அப்பாவோட தெவசம் (திவசம்) அப்பா அம்மா இருக்கும் போட்டோ படத்தை தொடச்சிட்டு ரொம்ப நேரமா பாத்திட்டு இருந்தேன் அப்பா..வேலூர் போலீஸ் லைன்ல இருக்கும்போது என்ன காம்பௌண்டு சொவத்து மேல ஒக்கார வச்சி வெளிய மெயின் ரோட்டுல போற வர்ற வண்டிய வேடிக்க காட்டிட்டு இருப்பார். கத சொல்லுப்பான்னா 'போச்சுன மண்ட வந்தன மண்ட" ன்னு என்னம்மாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு அப்பாவுக்கு கதையே சொல்ல வராது அம்மாவுக்கு வித விதமா கதைசொல்ல வரும் அம்மான்னு இல்ல அவங்க அக்கா தங்கச்சிமாருங்கஅத்தனி பேருக்கும் கத சொல்ல வரும் அதுவும் கதக்கின்னு பொறந்த மாதிரி சூர்கத்தி பெரிம்மா சொல்ற கதையெல்லாம் சூப்பரா இருக்கும் .. அவங்களோட மடியில படுத்துகிட்டு பொகயிலை வாசத்தை மொகந்துக்கின்னு கத கேக்கறதே ஒரு சொகந்தான் .. கிட்டத்தட்ட எல்லா பெரியம்மாகிட்டவும் இந்த பொகயிலை வாசம் அடிக்கும் நானும் ஒரு தபாபொகயிலைபோட ட்ரை பண்ணேன் எம்மாடி .. கண்ணுல்லாம்சொருவிக்கிட்டு போயிடுச்சு எப்படித்தான் போடராங்களோ விடிஞ்சி அதோட மொகத்துல முழிக்கிற ஜனங்களும் இருக்கு பொகயிலை கெடைக்காம பயித்தியம் புடிச்சா மாதிரு ஒக்காந்திருக்கும் ஆளுங்களை பாத்திருக்கேன்.. யாங்க்க்கா ஒரு துண்டு போயலை குடேங்க்க்கான்னு கேஞ்சறதே நெறைய தடவ பாத்திருக்கேன் .. அது ஒரு சொகம்.. வெத்தில போடறதும் அப்படித்தான் அது ஒரு கலை மாதிரி பெருசுங்க போடறத வேடிக்கை பாத்துகிட்டு ஒக்காந்திருக்கிறதுண்டு அதாலையோ என்னமோ வெத்தல பெட்டிக்கு வெத்தல செல்லம்ன்னு ஒரு பேரு உண்டு தங்கவேல் மாமா சூர்கத்தி பெரிமாவோட வீட்டுக்கு வெளியே .....(அத வீடுன்னு சொல்ல முடியாது. ஒத்த ரூம் அதலதான்அதோட வாழ்க்கைய வாழ்ந்து முடிச்சுது ..) அவர் ஒக்காந்துகிட்டு சாகவாசமா வெத்தல போடறத கிட்ட இருந்து சுவாரஸ்யமா பாப்போம் .. ரெண்டு பெரும் என்னென்னமோ பேசிகிட்டே இருப்பாங்க அவருக்கு இவங்க மேல ஒரு இதுன்னு கூட சொல்ல கேட்டிருக்கேன் இருக்கலாம் சின்ன வயசுலேயே "அறுத்துட்டு" வந்தவங்க ...புருஷன் , குடும்பம், கொழந்தேன்னு இருந்து வாழ்ந்தது கெடயாது சின்ன வயசுலேயே எல்லாம் முடிஞ்சி போச்சு .. ஊர்லயேபெரிய பணக்காரன்னு அந்த கிழவனுக்கு குடுத்திருக்காங்க மூனாவதோ நாலாவதோவா வாக்கப்பட்டாங்க .. கெழவன் கல்யாணத்துக்கு ரெண்டாவது வருஷமோ மூணாவது வருஷமோ மண்டய போட்டுருச்சு ..என்ன பண்றது ஏழு அக்கா தங்கச்சிக்கும் ஒரே அண்ணன் ... வந்துருச்சி அண்ணன் வீட்டுக்கு .. அப்பத்திலே இருந்து அண்ணன் வீடு தான் வாழ்க்கைன்னு ஆயிடுச்சி அக்கா தங்கச்சி மாருங்க புள்ள பெத்தா ... சீக்குல விழுந்தா ஒடனே அவசரத்துகேத்த மாதிரி ஆளு வரும் இல்ல லெட்டர் வரும் ஒடனே ரெண்டு சேலை ரவிக்கைய தூக்கிகிட்டு ஓட வேண்டியதுதான்னு பொழப்பு ஆயிடுச்சி என்னோடஎல்லா தங்கச்சி தம்பி மாருங்களுக்கு சூர்கத்தி பெரிம்மா சூத்து கழுவி விட்டு இருக்கு குளுப்பாட்டி கூழு ஊத்தி இருக்குஆனா சமயக்கட்டு வேல மட்டும் புடிக்காது .. பட்டினியா வேணா இருக்குமே தவிர சோறாக்கி சாப்படணும்னா அவ்ளோ கசக்கும் ...
எங்களுக்கெல்லாம் சூர்கத்தி பெரிம்மா ஊர்லருந்து வராங்கன்னா அவ்ளோ சந்தோசம்.. ஒன்னு கத கேக்கலாம் ரெண்டு அம்மாவோட திட்டுல இருந்து தப்பிச்சிக்கலாம் .. எங்கள அம்மா திட்டினா ஒடனே பெரிம்மா சப்போட்டுக்கு வரும் "யாண்டி  கொயந்திங்கள போட்டு அப்பிடி போரிச்சி எடுக்கற வெளயாடற பசங்களுக்கு இன்னா தெரியும்.. நீ போடா கண்ணே ன்னுட்டு எங்கள காப்பாத்தி விடும் ..  அதுவும் போயி சேந்துருச்சி .. கடசி காலத்துல பார்வதி தான் அதோட பீ.. மூத்ரம் வாரிப்போட்டா .. சங்கரு போய் அதுக்கு கொள்ளி போட்டுட்டு வந்தான்.. தனக்குன்னு ஒரு வாரிசு இல்லாம போய் சேர்ந்திருச்சி ..